[ A+ ] / [ A- ]

EMD Toronto Paramedic Services

911 இனை அழைக்கும்போது என்ன நிகழும்

911 இனை அழைக்கும் ஒருவர், ஆரம்பத்தில், அழைப்பை மூன்று அவசரகால சேவைகளுள் ஏதேனும் ஒன்றுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்பாட்டாளர் ஒருவருடன் தொடர்பு கொள்வார்: அவையாவன ரொறன்ரோ காவல்துறை, ரொறன்ரோ தீயணைப்புச் சேவை அல்லது ரொறன்ரோ மருத்துவ உதவியாளர் சேவைகள்.

அழைப்பானது அவசரகால மருத்துவத் தேவைக்கானது என்பதைச் செயற்பாட்டாளர் வரையறுத்துக் கொண்டவுடன், நீங்கள் ரொறன்ரோ மருத்துவ உதவியாளர் சேவைகள் அழைப்புக்கு மாற்றம் செய்யப்படுவீர்கள். தங்களது அழைப்பிற்குப் பதில் செயலாக மருத்துவ வண்டிச் சேவைகள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

எப்போது 911 இனை அழைப்பது

அவசரத் தேவையின்போது மட்டுமே 911 இனை நீங்கள் பயன்படுத்தல் வேண்டும். அவசரத் தேவைச் சேவைகளுடனான முன்னுரிமைத் தொடர்புகளை மக்கள் ஏற்படுத்திக் கொள்வதற்கு 911 உதவுவதுடன், அதன் தேவையை உண்மையாக நாடி நிற்பவர்களுக்காக அது ஒதுக்கப்படுதல் வேண்டும். தங்களது பிரச்சினை பாரதூரமானதா இல்லையா என்பதை அறிதல் சிலசமயங்களில் கடினமாக இருக்கும். தாங்கள் எப்போது அவசரகால மருத்துவ சேவைகளை நாடி நிற்றல் வேண்டும் என்பதோடு எப்போது தாங்கள் 911 ஐ அழைக்க வேண்டும் அல்லது அவசரப் பிரிவுக்குச் செல்ல வேண்டும் என்பதற்கு இங்கு சில உதாரணங்கள் தரப்பட்டுள்ளன.*

  • தாங்கள் நெஞ்சில் வலியை அல்லது இறுக்கத்தை உணரும்போது
  • தங்களுக்கு மிதமிஞ்சிய வலி ஏற்படும்போது
  • தங்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்போது
  • ஒருவருக்குத் திணறடிப்பு அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்போது
  • தாங்கள் எலும்புப் பிளவுக்கு அல்லது எலும்பு முறிவுக்கு உட்பட்டதாக எண்ணும்போது அல்லது தையல் தேவைப்படக்கூடிய காயத்தைக் கொண்டுள்ளபோது
  • தங்களுக்குத் திடீர் கடும் தலையிடி, பார்வைக் கோளாறு, திடீர் பலவீனம், உணர்வின்மை மற்றும்/அல்லது முகம், கை அல்லது கால் என்பவற்றில் உட்கூச்செறிவு, பேசுவதில் இடர்ப்பாடு, அல்லது தலைசுற்று ஏற்படும்போது
  • தங்களது பிள்ளைக்கு வயிற்றோட்டம் மற்றும்/அல்லது வாந்தியெடுத்தல் என்பன இருப்பதோடு எதனையும் உண்ணாது அல்லது குடிக்காது இருக்கும்போது
  • ஆறு மாதத்திற்கும் குறைந்த குழந்தைக்கு 38.5ºC (101ºF)ற்கும் அதிகமாகக் காய்ச்சல் இருக்கும்போது

*தங்கள் அவசர மருத்துவத் தேவையை நாட வேண்டியுள்ளதா என்பதிலே தங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 911 ஐ அழைக்கவும். மருத்துவ வண்டிச் சேவையானது தங்களை உரிய அவசரகாலப் பிரிவுக்கு எடுத்துச் செல்லும்.

நீங்கள் ஆங்கிலம் பேசத் தெரியாதவராயின், 911 இனை அழைப்பது

தாங்கள் ஆங்கிலம் பேசத் தெரியாதவராயினும், உதவியானது சில நிமிடங்களிலேயே தங்களுக்குக் கிடைக்கப்பெறும். 140 மொழிகளில் தங்களுக்கு உதவக்கூடிய எமக்குதவும் மொழிபெயர்ப்பாளர்களுடன் எமக்கு உடனடித் தொடர்புகள் உள்ளன. அவசர நிலைமைகளில் 911 இனை அழைக்கும்போது, மொழிபெயர்ப்பாளர்களுடனான நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் தேவை உள்ளதை எங்களுக்கு அறியத்தருவது விலைமதிப்பற்ற நேரச் செலவைக் குறைக்க உதவும் என்பதை நினைவில் வைத்திருப்பது முக்கியமாகும்.

தங்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாத உறவினர் ஒருவர் அல்லது நண்பர் ஒருவர் இருப்பாராயின், அவசரத் தேவையின் போது ஆங்கிலம் பேசத் தெரிந்த ஒருவரின் உதவியை அவர் தேடிநிற்காது, 911 என்ற இலக்கத்திற்கு நேரடியாக அழைக்க வேண்டும் என்பதை அவருக்குத் தெரியப்படுத்திக் கொள்ளவும்.

911 in any language 2

தாங்கள் 911 ஐ அழைக்கும்போது எதை எதிர்பார்ப்பது

தாங்கள் 911 ஐ அழைக்கும் போது, தவறாது அமைதியாக இருந்து தெளிவான தகவல்களைக் கொடுப்பதற்கு மறக்க வேண்டாம். பின்வரும் தகவல்களைக் கொடுப்பதற்குத் தயாராக இருக்கவும்:

தங்களுடன் முதலாவதாகப் பேசும் நபர் தங்களுக்கு காவல்துறை, தீயணைப்பு அல்லது மருத்துவ வண்டிச் சேவைகளுள் எது தேவை என்பதையும், ஆங்கிலம் பேசத் தெரியாதவராயின் தங்களது தாய்மொழி எது என்பதையும் விசாரிப்பார்.

தங்களுக்கு மருத்துவரீதியான அவசரத் தேவை இருக்குமாயின், தாங்கள் அவசர மருத்துவ விரைந்தனுப்பு அதிகாரிக்கு மாற்றப்படுவதோடு அவர் தங்களிடம் பின்வரும் விடயங்களைக் கேட்பார்.

  • அவசரத் தேவைக்கான இடவமைவு
  • என்ன நடைபெறுகின்றது என்பது தொடர்பான சுருக்கமான விபரணம்
  • தங்களது பெயர், விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கங்கள்
  • வீட்டு இலக்கம் மற்றும் பொருத்தமாயின் தொடர்புக் குறியீடு

தங்களுக்கு விரைவாகவும் பயனுள்ளதுமான உதவியை வழங்குவதற்காக மருத்துவ விரைந்தனுப்பு அதிகாரியானவர் குறிப்பிடத்தக்க கேள்விகளை குறிப்பிட்ட ஒழுங்கிலே கேட்டல் வேண்டும் என்பதை மனதிலிருத்திக் கொள்ளவும். அழைப்பைப் பெற்றுக்கொள்பவர் கேட்டுக் கொண்டாராயின் மேலதிகத் தகவல்களை வழங்குவதற்காக அழைப்பில் தொடர்ந்திருக்கவும்.

வேறெதனை நான் புரிதல் வேண்டும்?

மருத்துவ விரைந்தனுப்பு அதிகாரிக்குத் தாங்கள் தங்களது விபரங்களைத் தெரிவித்த பின்னர், மருத்துவ உதவியாளர் தங்களுக்கு உதவிபுரிதற்கு பின்வரும் விடயங்கள் உதவியாக அமையும்.

  • நோயாளியை அணுகுவதற்கு இலகுவாகத் தளபாடங்களை இடம் மாற்றி வாசற்கதவினைத் திறக்கவும்
  • இயலுமாயின் யாரேனும் ஒருவர் மருத்துவ வண்டியை அணுகவும்
  • வீதியிலிருந்து பார்க்கும்போது, தங்களது வீட்டின் இலக்கம் தெளிவாகத் தெரியும்வண்ணம் பார்த்துக் கொள்ளவும்
  • தாங்கள் வீடொன்றில் வசிப்பவராயின், இரவுநேரத்தில் வெளிவிளக்குகளைப் போட்டு வைக்கவும்.
  • தாங்கள் தொடர்மாடியில் வசிப்பவராயின், மருத்துவ வண்டியை வரவேற்புக் கூடத்தில் சந்திப்பதோடு, மின்ஏற்ற மாடத்தைத் தயார்படுத்தி வைக்கவும்.
  • உயிராபத்து நேரும் சந்தரப்பம் இல்லையாயின், நோயாளியை அசைக்க வேண்டாம்.